அழவேண்டும் யான் உருண்டு புரண்டழுது தொழவேண்டும்
ஐயன் உந்தன் அடியை வந்து சேரும்வரை அழவேண்டும்
அடியார்க்கு அருள் செய்ய சிவம் இறங்கி நடந்து வந்த
தென்னாட்டு மண்ணெங்கும் உருண்டு புரண்டழ வேண்டும்
பிட்டுக்கு மண் அள்ளிப் பிரம்படி பட்டவைகை
ஆற்றங் கரைமணலில் உருண்டு புரண்டழ வேண்டும்
அடியேன் இறங்கிவந்து தாயகத்தில் கால்பதித்த
சிராப்பள்ளி மண்மீது உருண்டு புரண்டழ வேண்டும்
அடியெடுத்து நடந்துவந்து கோவணத்தை எடைபோட்ட
திருநல்லூர் மண்ணில் யான் உருண்டு புரண்டழ வேண்டும்
உச்சிமுதல் பாதம் வரை உடல் மண்ணில் பொருந்துமாறு
அத்தன் எனக்கு அருள்செய்த பெருந்துறையில் புரளவேண்டும்
புகலூரின் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசவேண்டும்
புண்ணியனார் நடனமாடும் தில்லை மன்ணைத் தின்னவேண்டும்
விழவேண்டும் திருவதிகை மண்மேல் யான் விழவேண்டும்
திருவையாறில் விழுந்தெழும்பி மண்தேய்த்து முழுகவேண்டும்
திருவாரூர் மண்ணை அள்ளி தலை மேலே சுமக்க வேண்டும்
தீண்டத்தீண்ட இன்பம் தரும் கச்சி மண்ணை அளைய வேண்டும்
திருவொற்றியூர் மண்ணையள்ளி சிவலிங்கம் பிடிக்க வேண்டும்
தீரும் வரை செய்த பாவம் மதுரையிலே உருள வேண்டும்
இந்த மண்ணில் மடியவேண்டும் மடிந்து சாம்பல் ஆகவேண்டும்
சுடுகாட்டுப் பொடியணியும் சிவன் அதை அள்ளிப் பூசவேண்டும்