மனிதனுடைய வாழ்க்கையில் சிவபெருமான் திருவடியில் சரணடைவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று ஆகும். சிவனடி சேர்ந்தாலன்றி துன்பமின்றி இன்பமாக வாழ முடியாது. நிம்மதியாகவும் நோயின்றியும் வாழ முடியாது. அச்சமின்றி பாதுகாப்பான உணர்வுடன் வாழ முடியாது. இதையே மாணிக்கவாசகர் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் என விளக்கி மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் எனச் சரணடைகிறார். இந்த மெய்யை எல்லா உயிர்களுக்கும் தன்னுடைய திருவருளால் எவ்வாறு உணர்த்துகிறார். அதை உணரும் பொருட்டு நாம் எவ்வாறு சிவனை நாட வேண்டும் என்பதை சிவபுராணத்தில் விளக்கிக் கூறுகிறார். தன்னுடைய உணர்வில் ஏற்பட்ட திருவருள் பதிவினால் உண்டான இந்த விளக்க பாடலை சொல்லி பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் யாவரும் தம்முடைய உணர்விலும் அடையப் பெறுவர் என்பதை சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து எனக் கூறி முடிக்கிறார். இவ்வாறாக சொல்லிய பாட்டின் பொருளை இறைவன் கூற தம்பிரான்தோழர் கபிலனார் அவர்கள் உணர்ந்து அருளியது.