நூல் வெளியீடுகள்

 

நெஞ்சமென்னும் நாட்குறிப்பு

 

சிவபுரம் ஐயா தம்பிரான்தோழர் கபிலனார் அவர்களின் நெஞ்சம் என்ற நாட்குறிப்பில் இருக்கும் பதிவுகளை இன்று நூற்பதிப்பாக வெளியிடுகிறார்கள் சிவபுரம் அறக்கட்டளை அன்பர்கள்.

இந்த நாட்குறிப்பில் காணும் செய்திகள் சிவத்தைக் கண்டு இன்புற்று வாழ நினைப்பவர்களுக்கும் வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இந்த நாட்குறிப்பால் நான் உணர்ந்த செய்திகள் சிலவற்றை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சிவபெருமான் உயிர்களின் பொருட்டு படைத்தருளிய தனு, கரண, புவன, போகங்களைக் கொண்டு மாளா இன்பக் கடலில் மூழ்கித் திளைக்காமல் இன்பம்-துன்பம், பிறப்பு-இறப்பு என்ற பிறவிக்கடல் சுழலில் அவைகள் சிக்கித் தத்தளிப்பதற்குக் காரணம் சிவத்தை மறந்து தன் முனைப்போடு செயல்படுவதும், மாய இருளில் அகப்பட்டு மாயத் தெய்வங்கள்பால் ஈர்க்கப்பட்டு வழி தடுமாறிச் செல்வதும், நம்மைக் காப்பதுபோல் காத்து சிவத்தைக் காட்டி வழிகாட்டி அருளுவதற்காக இறைவனால் படைக்கப்பட்ட மாயத் தெய்வங்களையே நாம் முழுமுதலாகக் கொண்டு வழிபடுவதும் ஆகும்.

ஐயாவின் வாழ்க்கைப் பயணத்தில் - சிவபெருமான் செய்து காட்டிய அதிசயங்களையும் அற்புதங்களையும் மற்றும் தான் எதிர்கொண்ட இடர்பாடுகளையும் அச்சுறுத்தல்களையும் அவைகளிலிருந்து திருவருளால் தப்பி வந்த அனுபவங்களையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார் ஐயா அவர்கள்.

மெய்யை எவ்வாறு பொய் மறைத்து மெய்யை நாம் அடையத் தடையாக உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார் ஐயா அவர்கள்.

மாயப்படைகளின் அல்லலிருந்து தப்பிக்கத் தேவை பணிவு - அதனைத் தகர்த்தெறியத் தேவை துணிவு என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார் ஐயா அவர்கள். சிவம் ஒன்றே முழுமுதல் என்பதை உணர்ந்து துணிந்து, அவன்பால் அன்பால் கசிந்துருகி, வாழ்தலே வழிபாடாக வாழ்ந்து வர நம் உணர்வால் சிவனை உணரலாம். அங்கு தொடர்ந்த இன்ப ஊற்றாக வெளிப்படும் சிவம் என்ற இன்பக் கடலில் மூழ்கித் திளைக்கலாம் என்பதை உணர்த்தி நமக்கு வழிகாட்டித் துணையாக இருக்கிறார் ஐயா அவர்கள். சிவபுரம் அடியார் நெறி என ஐயா கூறுவது:

  • அறம் அல்ல சிவம் அன்பே சிவம்
  • பணிவு அல்ல சிவம் துணிவே சிவம்
  • அறிவு அல்ல சிவம் உணர்வே சிவம்
  • இன்புற வாழ்வாரே இறைவனடி சேர்வார்
  • வாழ்தலே வழிபாடு