திருவாசகத்தைச் சிவபுரத்தில் அடியார்கள் நாள்தோறும் சிவபுரம் ஐயாவை முன்வைத்துப் பாடுவது வழக்கம். அவ்வாறு பாடும்போது அவர் திருவாசக வரிகளின் மெய்ப்பொருளை முடிந்தவரை யாவரும் உணருமாறு விளக்குவார். மேலும் திருவாசக முற்றோதல் தீபவழிபாடு எனச் சிவபுரத்தில் ஒவ்வொரு பிரதோஷ நாளன்றும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திருவாசகம் முழுவதையும் பாடி ஒரு வழிபாடும் நடைபெறுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட அடியார்கள் பலரும் பல வருடங்களாகத் திருவாசகத்திற்குத் தம்பிரான்தோழர் கபிலனார் ஐயா முழுமையான ஒரு விளக்கத்தை எழுத வேண்டுமெனக் கேட்டுக் கொண்டே இருந்தனர். அந்த விண்ணப்பங்களே இன்று இந்த நூல் வெளிவர காரணமாயிற்று.
இந்த நூலைத் தமிழால் இறைவனைப் பாடு, தமிழே உன் வழியாகும்; தமிழால் இறைவனை நாடு, தமிழே உன் குருவாகும்; தமிழால் இறைவனைப் போற்று, தமிழே சிறந்த சிவமாகும் என்ற ஐயா கூறும் மெய்யை உணரத் தமிழர் யாவரும் படிக்க வேண்டிய நூல் இதுவென உணர்ந்து படித்து, மேலும் பலரையும் படிக்கத் தூண்ட வேண்டும் என இறைவன் திருவடிகளைப் போற்றுகிறோம்.