உறவு

இறைவன் என்று சொல்லும்போது அவன் எப்படி இருப்பான் என்று கேட்பார்கள். சிவபெருமான்தான் முழுமுதற் கடவுள் என்றால் அதற்கு போட்டியாக தாங்கள் வணங்கும் சிறு தெய்வங்களைச் சொல்லி அதுதான் முழுமுதற் கடவுள் என்பார்கள். சிவபெருமான்தான் முழுமுதற் கடவுள் என்பதற்கு என்ன ஆதாரம் என்றும் கேட்பார்கள். உண்மை என்னவென்றால் நீ உன்னுடைய தாயார் என்று நம்பும் அந்த அன்னைதான் உன்னைப் பெற்றவள் அல்லது உனக்கு அன்னை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. என்ன நிரூபனம் வைத்திருக்கிறீர்கள்  என்று கேட்டால் ஒன்றுமில்லை. சொன்னார்கள் நம்பினோம், நம்புகிறோம். அந்த நம்பிக்கை வெறும் நம்பிக்கை எப்படி ஒரு பிரிக்கமுடியாத பாசமாக, பிரிய நேர்ந்தால் தாங்கமுடியாத துயரமாக மாறுகின்ற அளவுக்கு இறுகி பாசமானது. அதற்கு ஒரே காரணம் பழக்கம்தான். நமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நம்மை பாலூட்டி, சோறூட்டி, கழுவி, துடைத்து, வளர்த்து கூடவே இருந்து அவள் காட்டின அந்த நட்புதான், பழக்கம்தான் பெரிய பாசமாகிவிட்டது. என்னுடன் நீங்கள் கொஞ்சம் நாள்  பழகினால்கூட அல்லது இன்னொருத்தரோடு பழகினால்கூட அந்த நட்பு உண்டாகும். அந்த நட்பு பிரியும்போது நெஞ்சு வலிக்கும். வருத்தமாக இருக்கும் இது இயல்பானது.

 அதுபோல முழுமுதற் கடவுளாகிய சிவத்தோடு பழகிப்பார்த்தால் ஒரு நட்பு உண்டாகும். அந்த நட்பில் வரக்கூடிய நன்மைகளை அறியாதவன்தான் நிரூபனம் கேட்பான். கடவுளைத் தேட ஆரம்பித்தால் பெரும் துன்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். தேடிக் கண்டறிய முடியாதவன். அவனை தேட ஆரம்பித்தால் அதற்குப் பெயர் அகங்காரம். உன்னால் கண்டுபிடிக்க முடியாது என்பதை அவர் உணர்த்தும் பொருட்டு  கணக்கற்ற துன்பங்களைச் சந்திக்கும் நிலையை உனக்கு உருவாக்குவார்.  ஆக சிவத்தைத் தேடாமல் சிவம்தான் முழுமுதற் கடவுள். அவர்தான் எல்லா துன்பங்களிலிருந்தும் எம்மைக் காப்பார். இவ்வுலகில் இன்புற வாழவும் அவ்வுலகில் தன்னடியில் சேர்த்துக்கொண்டு ஆளவும் வல்ல ஒரே தெய்வம் ஒரே உறவு சிவம் என்பதை நான் சொல்கிறேன். முன்னோர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்டு பழகினால், எப்படி அம்மா இவள்தான் என்பதையும் அப்பா இவன்தான் என்பதையும் ஏற்றுக்கொண்டு பழகி அந்த உறவில் இலயித்து இன்புற்றோமோ அதேபோலத்தான் தெய்வத்தையும் அறிந்துகொள்ள முடியும். சிவமே முழுமுதற் கடவுள். அவனே கவலையில்லாத மனம் ஒன்றை எமக்குத் தந்து இவ்வுலகில் இன்புற வாழவைக்கக் கூடிய ஒரே உறவு என்பதை உணர்ந்து அவனோடு பழகிப் பாத்தால் அந்த பேரின்ப சுகம் தெரியும்.