பூமிக்கருவறையில்

 

குழந்தை பிறந்ததும் முதலில் செய்யும் செயல் என்ன? அழுவது; ஆம் அழும்போதுதான் குழந்தை மூச்சு விட அதாவது சுவாசிக்க ஆரம்பிக்கிறது. அதுவரை கருவறையினுள் கர்ப்ப நீரில் மூழ்கியிருந்த குழந்தை தானே சுவாசிப்பது கிடையாது; கருவறையில் வாழும் வரை தாயின் சுவாசத்திலேயே குழந்தை உயிர் வாழ்கிறது. அதுபோலவே பூமி என்பது மனிதர்களின் கருவறை ஆகும். பூமிக் கருவறையில் வாழும் உயிர்களுக்கு தாய் சந்திரன், தந்தை சூரியன் ஆகும். இதனால்தான் ஜோதிட சாத்திரங்கள் ஒருவரின் தாய் பற்றி சந்திரன் இருக்கும் நிலை அடிப்படையிலும், தந்தை பற்றி சூரியன் இருக்கும் நிலை அடிப்படையிலும் எதிர்வு கூறுகின்றன.

மனிதன் தான் விடும் மூச்சை 1. ஒழுங்குபடுத்தல் 2. கட்டுப்படுத்தல் 3. அடக்குதல் ஆகிய மூன்றையும் யோகம் எனப் பயில்கிறான்.

இந்த யோகப் பயிற்சியின் மூலம் 1. ஞானேந்திரியம் 2. கன்மேந்திரியம் 3. அந்தக்கரணம் ஆகியவற்றின் செயல்பாடுகளை 1.ஒழுங்குபடுத்தவும் 2.கட்டுப்படுத்தவும் 3. அடக்கவும் செய்கிறான்.

 

ஆன்ம போதம்

ஞானேந்திரியங்களாவன மூக்கு, நாக்கு, கண், தோல், செவி ஆகிய ஐம்பொறிகள் ஆகும்.

கன்மேந்திரியங்களாவன கருவாய், மலவாய், கை, கால், நாக்கு ஆகிய ஐந்தாகும்.

ஞானேந்திரியங்கள் வாயிலாக மனிதன் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் அறிகிறான்.

மூக்கு + மண் = மணம்

நாக்கு + நீர் = சுவை

கண் + தீ = உருவம்

தோல் + காற்று = தொடுகை

செவி + ஆகாயம்= ஓசை

ஐம்பொறிகள் ஐம்பூதங்களை ஐம்புலன்களாக உணர்கின்றன.

 

ஐம்புல உணர்வுகள் உடலோடு இணையவே கன்மேந்திரியங்கள் வாயிலாக உடல் கீழ்வருமாறு செயல்பட ஆரம்பிக்கிறது.

கருவாய் + மண் = விந்து வெளிப்படல்

மலவாய் + நீர் = கழிவு வெளிப்படல்

கை + தீ = கொடுத்தல், வாங்கல்

கால் + காற்று = போதல், வருதல்

நாக்கு + ஆகாயம் = பேச்சு

நாக்கு ஞானேந்திரியமாக சுவையை அறியும், கன்மேந்திரியமாக பேசவும் செய்கிறது.

இந்தச் செயற்பாடுகளால் இன்னதென்று உணரக்கூடிய ஆனால் இருக்குமிடம் சுட்டிக் காட்ட முடியாத அறிவுறுப்புகள் (Intellectual organs) எனும் மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கும் தோன்றிச் செயல்பட ஆரம்பிக்கின்றன.

மனம்

பலவகைக் காட்சி அல்லது பொருட்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் எதுமேல் ஒருவனுடைய கவனம் பதிகிறது (லயிக்கிறது) என்பதைத் தீர்மானிப்பது மனம் ஆகும்; அதாவது மனம் என்பது ஒன்றைப் பற்றிக்கொள்கிறது.

புத்தி

மனம் பற்றிக்கொண்டது எதை என்பது பற்றி புத்தி ஆராயும். எடுத்துக்காட்டாக மின்னும் இந்தப் பொருள் தங்கமா, செம்பா என ஆராய்வதைக் குறிப்பிடலாம்.

அகங்காரம்

புத்தி ஆராய்ந்த பொருள் இன்னது தான் என்ற முடிவை அகங்காரம் செய்கிறது. எடுத்துக்காட்டாக இது செம்பல்ல தங்கமே எனச் செய்யும் முடிவைக் குறிப்பிடலாம்.

சித்தம்

அகங்காரம் செய்த முடிவைப் 1. பலமுறை எண்ணி மகிழ்வதும் 2. அந்த முடிவு தனதென அதிகாரம் செய்வதும் 3. அந்த முடிவை வைத்து அடையக்கூடிய நன்மை, தீமை மற்றும் இலாப நட்டம் பற்றி கணக்கிடுவதும் சித்தம் செய்யும் செயல்களாகும்.

ஞானேந்திரியம் 5, பூதங்கள் 5, புலன்கள் 5, கன்மேந்திரயம் 5, அந்தக்கரணங்கள் 4, ஆகிய 24 உம் ஆன்மதத்துவங்கள் ஆகும்.

ஆன்மா தனக்கு உடையாகத் தன் மேல் போர்த்தியுள்ள இந்த ஆன்மதத்துவங்கள் 24 ஐயும் ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும், அடக்கவும், யோகம் வழி காட்டுகிறது.

இந்த தத்துவங்கள் தம்மை அறியமாட்டா; ஆன்மாவே அறியும் தன்மை உள்ளது. எடுத்துக்காட்டாகச் சொன்னால் உணவு சுவையை அறியாது, உண்ணும் நாவும் சுவையை அறியாது (எவ்வாறெனில் இறந்தவன் நாவில் உணவை வைத்தால் அது சுவையை அறியாது) உயிரான ஆன்மாவே சுவையை அறிகிறது.

இந்த வகையில் 24 ஆன்ம தத்துவங்களையும் ஆள்வதன் மூலம் ஆன்மாவை ஆள்வதாக யோகியர் பலரும் கருதுகின்றனர். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே உள்ளது.

ஆன்மா இல்லையேல் எதையும் அறிய முடியாத நிலையில் உள்ள தத்துவங்களை ஆள்வதன் மூலன் ஆன்மாவை அடைக்க முடியுமே அல்லாமல் விடுவிக்க முடியாது என்பதே உண்மை.

உடலில் வழங்கும் உறுப்புகளை நாம் கீழ்வருமாறு பகுக்கலாம்:

1. இச்சை செயலால் கட்டுப்படுத்தக் கூடிய உறுப்புகள்

எ-டு : கை, கால், வாய் முதலியன

2. இச்சைச் செயலால் கட்டுப்படுத்த முடியாத உறுப்புகள்

 

I. இன்னதென்று கண்டறியக் கூடியவை

எ-டு : ஈரல், இதயம் முதலான உடலுறுப்புகள்

 

II. இன்னதென்று கண்டறிய முடியாதவை

எ-டு : நாடி, வாய்வு, குண்டலினி போன்றவை

மேலே கூறிய மூவகை உடலுறுப்புகளையும் ஒழுங்குபடுத்தலும், கட்டுப்படுத்தலும், அடக்குதலுமே யோகம் எனவும் யோகம் விளக்கப்படுகிறது.

பூமிக் கருவறையில் வாழும் உயிர் காற்று எனும் கர்ப்ப நீரில் சந்திரத் தாயின் சுவாசத்திலே உயிர் வாழுமாறு தன்னுடைய மூச்சை அடக்கி வாழும் கருநிலை, சமாதி எனப்படுகிறது. இந்தக் கருநிலைச் சமாதியை ஆன்ம விடுதலை எனக் கருதுவது எந்த வகையிலும் பொருத்தமற்ற ஒன்றே ஆகும்.

கருவறையில் எந்த உயிரும் எவ்வாறு நிரந்தரமாக வாழ முடியாதோ அது போலவே பூமிக் கருவறையில் சமாதி நிலையிலும் யாரும் தொடர்ந்து வாழ முடியாது. ஜீவசமாதி என்பது பிறர் போற்ற வேண்டி ஒருவன் செய்து கொள்ளும் தற்கொலையே ஆகும்.

ஆன்ம தத்துவங்களை அறிந்து அவற்றிலிருந்து விடுபட்டு ஆன்மா பற்றி அறிவது ஆன்மபோதம் ஆகும்.

பஞ்சாட்சரம்

மூச்சை பஞ்சாட்சரத்தோடு (நமச்சிவாய) இணைப்பதன் மூலம் காற்றான மூச்சை திருவருளாக மாற்றுவதே நமச்சிவாய எனும் பஞ்சாட்சரம்.

தியானம் என்பது எப்போதும் ஒன்றில் லயித்தல் எனப் பொதுவாக விளக்கப்படும். சத்து பொருட்களின் மேல் உண்டாகும் லயத்தில் செயற்பாடுகள் ஒடுங்குவதும், அசத்து பொருட்களின் மேல் உண்டாகும் லயத்தில் செயற்பாடுகள் அதிகரிப்பதும் இயல்பே. சத்து பொருட்கள் அறிவுள்ளவை, அசத்து பொருட்கள் அறிவற்றவை. முழுமுதல் கடவுளான சிவபெருமான் திருவருளில் லயிப்பதற்கு வழிகாட்டுவதே பஞ்சாட்சரம் ஆகும்.

பரபோதம்

வித்தியா தத்துவங்கள் 7உம் பிரபஞ்ச உறுப்புகள் (Universal Organs) ஆகும். இந்த உறுப்புகளே ஆன்மாவை பிரபஞ்சத்தின் ஒரு கூறாக இயங்கச் செய்கிறது.

காலம் என்பது தோன்றியது முதல் மறையும் வரை என்ற எல்லை உணர்வாகும். இது பிரபஞ்சம் பற்றி தத்துவங்கள் வாயிலாக ஆன்மா அறிந்து கொள்ளும் ஓர் அருவப் பொருளாகும்.

நியதி என்பது காலம் எனும் எல்லை பற்றி வரும் வரிசை உணர்வாகும். எல்லை இருப்பதால் ஒவ்வொன்றும் முன், பின் என்ற வரிசைக்கு ஆளாகி எண்களால் வரிசைப்படுத்தும் அறிவைத் தோற்றுவிக்கிறது. இந்த தோற்ற மாற்ற நிகழ்வுகளின் வரிசையை ஆன்மா கட்டுப்படுத்த முடியாததாகவே உள்ளது. பிரபஞ்ச இயக்கமே இந்த வரிசையைத் தீர்மானிக்கிறது. இதனால் முன் செய்த வினைப் பயன் பின்னரும் பின் செய்த வினைப் பயன் முன்னழும் கூடத் தோன்றும்.

தன்னைக் கட்டுப்படுத்தும் (துன்பத்தைத் தரும்) செயல்களை ஓர் ஆன்மா செய்யத் தூண்டுவது கலை ஆகும். கட்டுப்பட்ட நிலையிலிருந்து தன்னை விடுவிக்கும் (ஞானத்தைத் தரும்) செயல்களைச் செய்யத் தூண்டுவது வித்தை ஆகும். கலை என்பதைக் கிரியாசக்தி எனவும், வித்தை என்பதை ஞானசக்தி எனவும் அழைக்கலாம். ஆசையைத் தூண்டும் இச்சா சக்தியை ஆன்மாவுக்கு அளிப்பது அராகம் ஆகும்.

மேலே கூறிய காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய ஐந்து உறுப்புகளை சட்டை போல் அணிந்து செயல்படும் தன்மையை ஆன்மாவுக்கு அளிப்பது புருடன் ஆகும்.

காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய 5 பிரபஞ்ச உறுப்புகளையும் அணிந்து புருடன் ஆடும் புருட நாடகத்தின் மெய்த் தன்மையை அறிய முடியாமல் ஆன்மாவைக் குழப்பத்தில் ஆழ்த்துவது மாயை ஆகும்.

வித்தியா தத்துவங்களை உணர்வதன் மூலம் ஆன்மா என்பது முழுதில் ஒரு பகுதி என்ற அறிவு உதயமாகச் சிவம் பற்றிய சிந்தை தோன்றிச் சிறப்பது பரபோதம் ஆகும்.

சிவபோதம்

அறிவு உறுப்புகளான (Intellectual Organs) 24 ஆன்மதத்துவங்களையும் பிரபஞ்ச உறுப்புகளான (Universal Organs) 7 வித்தியா தத்துவங்களையும் ஆடையாக அணிந்து ஆன்மா ஆடும் ஆன்ம நாடகத்தின் தன்மை அடிப்படையில் அவற்றை 5 வகையான சிவ தத்துவங்களாகப் பகுத்து உரைக்கலாம்.

ஞானசக்தி அதிகமாகவும் கிரியாசக்தி குறைவாகவும் இருக்குமாறு நிகழும் ஆட்டம் சுத்த வித்தை ஆகும். கிரியாசக்தி அதிகமாகவும் ஞானசக்தி குறைவாகவும் இருக்குமாறு நிகழும் ஆட்டம் ஈசுரம் அல்லது மகேசுரம் ஆகும். கிரியாசக்தியும் ஞானசக்தியும் சம அளவில் இருக்குமாறு நிகழும் ஆட்டம் சதாக்கியம் அல்லது சதாசிவம் ஆகும். முழுதும் கிரியா சக்தியாக இருக்குமாறு நிகழும் ஆட்டம் சக்தி ஆகும். முழுதும் ஞான சக்தியாக இருக்குமாறு நிகழும் ஆட்டம் சிவம் ஆகும். இந்த ஆட்டத்தை அறிவதன் மூலம் தன்னிலையையும் சிவத்தையும் உணர்ந்து சிவத்தோடு ஐக்கியமாக வேண்டிச் சரணடைவது சிவபோதம் ஆகும். சிவபோதத்தால் விளையும் ஐக்கியமே முக்தி ஆகும்.

முக்திப் பேரின்பம்

அறிவெனப்படுவது ஒன்றாயிருக்கையில் இறைவனோடு ஒத்திருக்கும். ஓரறிவு உள்ளவை தாவரங்கள் ஆகும். இதனால் தான் தாவரங்களின் இலைகளையும் பூக்களையும் தனக்கு உகந்தவையாக இறைவன் ஏற்றுக்கொள்கிறான். இறைவனின் இயல்பில் இருப்பதால் தாவரங்கள் நிர்க்குணத்தை நெருங்கியிருக்கின்றன. தாவரங்களே பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு அடிப்படையாகவும் அமைகின்றன. இந்த ஓரறிவு 2,3,4,5 எனப் பெருகி ஆறறிவாக உள்ளவனே மனிதன். மனிதன் கன்மேந்திரியம் வரையுள்ள (ஞானேந்திரியம், பூதம், புலன், கன்மேந்திரியம்) 20 தத்துவங்களை மட்டும் உடையவனாக இருக்காமல் அந்தக்கரணமும் (மனம், புத்தி, அகங்காரம், சித்தம்) உடையவனாக இருப்பதன் மூலம் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுகிறான். இதுவே இறைவனை உணர்ந்து வீடுபேறு அல்லது முக்தி எனும் பேரின்ப சுகத்தை அடையவும் காரணமாகிறது.

முக்தி எனும் பேரின்ப சுகம் பற்றிப் பல்வேறு மதத்தினரும் பலவிதமாக விளக்குவர். கலவி இன்பமே முக்தி என்பர் உலோகாயதர்; ஐம்புலன்களின் ஒடுக்கமே முக்தி என்பர் பௌத்தர்; மூவகை குணங்களின் அடக்கமே முக்தி என்பர் சமணர்; கன்மம் மறைதலே முக்தி என்கிறது பிரபாகரமதம்; ஆணவம் மறைதலே முக்தி என்பர் பேதவாதிகள்; உடல் அழியாது இருத்தலே முக்தி என்பர் சில சிவசமயவாதிகள்; பிரகிருதியையும் புருஷனையும் ஆய்ந்தறிதலே முக்தி என்பர் சாங்கியர்; ஆன்மா கெடுதலே முக்தி என்பர் பாஸ்கரியர்; அட்டமா சித்திகளை அடைவதே முக்தி என்பர் சித்தர்கள்; உயிரைக் கல் போலக் கிடக்கச் செய்தலே முக்தி என்பர் பாஷாணவாதிகள். உயிரானது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் நீங்கப் பெற்று கூடவே இறைவன் திருவருளையும் பெற்று நிற்பதே உண்மையான முக்தி நிலை ஆகும். முக்தி இன்பம் என்று ஒன்றில்லை எனப் பலரும் இன்று பேசியும் நம்பியும் வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.