நூல் வெளியீடுகள்

 

திருவாசகம்

 

திருவாசகம் நூல் வரலாறு

சிவபெருமான் ஆதி அந்தமில்லாமல் அனாதியாக இருப்பதுபோல் சிவனை வழிபடும் சமயமான சைவமும் எப்போது தோன்றியது என அறிய முடியாத அளவுக்கு பழமையானதாகவே இருக்கிறது.

 

முழுமுதல் கடவுள் சிவபெருமான். அவரால் முதலில் அருளப்பட்ட உலகியற்கை பற்றிக் கூறும் உலகியல் நெறி வேதம். அசுத்த மாயையிலிருந்து சுத்த மாயைக்குள் நம்மை ஈர்த்து ஆட்கொள்வதற்கு அவன் அருளியது ஆகமம். சிவபெருமானே யாவுமென உணர்ந்து அவன் அடியைச் சேர்ந்து பிறவிப் பயனான முக்தியை அடைவதற்கு வழியாக அமைந்த இந்துக்களின் ஒரே இறைநெறி திருவாசகம்.

 

சைவ சமயத்தில் சிவஞானத் தெளிவை அடைவதற்கு, தோத்திரம், சாத்திரம் என இருவழிகள் வழக்கில் உள்ளன. தோத்திரம் என்பது தமிழால் இறைவனைப் பாடி வழிபடுவது. சாத்திரம் என்பது கற்றுத் தெளிந்து பொய்யை விலக்கி மெய்யை உணர விரும்பி, சிவனை நாடி அவன் அருளைப் பெறுவது. சாத்திரமாகவும், தோத்திரமாகவும் அமைந்து இரண்டும் இணைந்த வடிவில் முக்திநெறியாகத் திருவாசகம் அமைந்துள்ளது.

 

திருவாசகத்தை மாணிக்கவாசகர் அருளிச் செய்ய சிவபெருமான் தானே கைப்பட எழுதினார் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

 

திருவாசக நூலின் சிறப்பைச் சொல்லும் பாயிரமாகத் தமிழ்கூறு நல்லுலகில் ஒரு வெண்பா வழங்கி வருகிறது.

 

தொல்லை யிரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி

அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே எல்லை

மருவா நெறியளிக்கும் வாதவுர் எங்கோன்

திருவா சகமென்னுந் தேன்.

 

சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளது. தேவார முதல்வரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஆகிய மூவரும் பாடிய முதல் ஏழு திருமுறைகள் அடங்கன் முறை என அழைக்கப்படுகிறது. இவர்களோடு எட்டாம் திருமுறையான திருவாசகத்தைப் பாடிய மாணிக்கவாசகரையும் சேர்த்து சைவ சமயக் குரவர் நால்வர் என்பது வழக்கம்.

 

திருவாசகம் இறைவனைப் பற்றிக் கூறும் மேலான நூல் என்பதால் "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்" என்று மாணிக்கவாசகர் அதில் பாடியுள்ளதால் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தமிழறிஞர் யாரும் திருவாசகத்திற்கு உரை எழுத முன்வரவில்லை என்பது இந்த நூலின் தனிச்சிறப்பே.

 

திருவாசகம் அகவல் நான்கு, திருச்சதகம் பத்து, தனிப்பாடல் நாற்பத்து ஆறு என மொத்தம் அறுபது பதிகங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பதிகமும் ஒன்று, இரண்டு, மூன்று, ஏழு, ஒன்பது, பத்து, பதிநான்கு, இருபது, ஐம்பது எனப்பல எண்ணிக்கைகளில் அமைந்த பாடல்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தப் பாடல்கள் 658 ஆகும்.

 

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் என்னும் கிறித்தவப் பாதிரியார் திருவாசகத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் மாணிக்கவாசகரை ஒரு பெண் பித்தர் எனப் பலவாறும் தவறாகச் சித்தரித்ததால் மேலை நாட்டவர் பலரும் திருவாசகத்தை தேடி வரவில்லை என்ற குறையை எல்லாம் வல்ல சிவபெருமான் விரைவில் போக்கி அருள்வாராக.